அலங்கார வளைவில் மோதி இளைஞர் உயிரிழப்பு: யார் காரணம்? பொதுமக்கள் கேள்வி
கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் உயிரிழந்ததற்கு யார் காரணம் என கேள்வியெழுப்பி சாலையில் எழுதப்பட்டுள்ளது.
கோவை, அவிநாசி சாலையில் உள்ள சிஐடி கல்லூரி அருகில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி, ரகு என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில், சாலையை ஆக்கிரமித்து அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டதால்தான், உயிரிழப்பு ஏற்பட்டதாக கோவை மாநகர் முழுவதும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதனிடையே விபத்து நடைபெற்ற இடத்தில் வட்டமிட்டு, அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரகுவைக் கொன்றது யார்? என்பதை ஆங்கிலத்தில் WHO KILLED RAGHU என்று சாலையில் எழுதப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.