ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஐந்து நபர்களை 'போலீஸ் கஸ்டடி'யில் எடுத்து செம்பியம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ய மூளையாக செயல்பட்டது யார் என்ற விடையை கண்டுபிடிக்க மூன்றாவது முறையாக கஸ்டடியில் எடுத்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கொலைக்கு முக்கிய நபராக பார்க்கக்கூடிய அருள் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது செல்போனில் அடிக்கடி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன் என்பவரின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான வழக்கறிஞருமான அஸ்வத்தாமனிடம் பேசி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அஸ்வத்தாமனுக்கு சம்மன் கொடுத்து நேற்று இரவு முதல் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சோழவரம் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில் பணம் கேட்டு தொழிலதிபரை மிரட்டிய சம்பவத்தில் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே நேரடி பகை ஏற்பட்டுள்ளது. அஸ்வத்தாமன் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி ஆம்ஸ்ட்ராங்கையும், உன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங் மற்றும் அஸ்வத்தாமனுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், அஸ்வத்தாமனின் முக்கிய பிசினஸான புறநகர் சென்னை ஸ்கிராப் பிசினசிலும் ஆம்ஸ்ட்ராங் கட்டபஞ்சாயத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை தீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலிலும் வழக்கறிஞரான அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கும் இடையே மோதல் ஏற்ட்டதாகவும் போலீசர் தெரிவிக்கின்றனர். இதே போல பல கட்ட பஞ்சாயத்துகளில் ஆர்ம்ஸ்டாங் தலையிட இந்த விவகாரம் அஸ்வத்தாமனின் தந்தையும் வேலூர் சிறையில் உள்ள ரவுடியுமான நாகேந்திரனுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வந்த நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்விடம் செல்போனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, முடியாது எனக்கூறி தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பொன்னை பாலு மற்றும் அருள் ஆகியோர் 5முறைக்கு மேல் வழக்கறிஞர் அஸ்வத்தாமனை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தின் போது வழக்கறிஞர் அஸ்வத்தாமன் வெளிநாட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என போலீசாரிடம் காட்ட அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்தாரா? அல்லது இவ்வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவரை சந்தித்து வந்தாரா? என்ற பல கோணங்களில் போலீசார் அஸ்வத்தாமனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு நடத்தப்பட்ட 16ஆம் நாள் நினைவு வேந்தல் காங்கிரஸ் நிகழ்ச்சியை அஸ்வத்தாமன் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.