சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் கைது
சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நியாஸ். இவர், சிறார் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தாக, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் துறையினர் நியாஸை தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட நியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அந்த நபரிடம் இருந்த செல்போன் மற்றும் மெமரி கார்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறார் ஆபாச படம் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதல்முறையாக ,குடியாத்தத்தில் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.