வாய்த் தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
சென்னை அருகே வாய்த் தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்,
சென்னை அருகேவுள்ள கெருகம்பாக்கம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் வெல்டராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு போதையில் தனது நண்பர்களுடன் நின்று ஆனந்தராஜ் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அந்த வழியே வந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்னா, என்பவரை வழிமறித்து நீ யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று கேட்டுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், பிரசன்னாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து பிரசன்னா அவரது நண்பர்களுக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வர வைத்துள்ளார். அங்கு வந்த பிரசன்னாவின் நண்பர்கள் ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இரு தரப்பும் மாறிமாறி தாக்கிக் கொண்டபோது, பிரசன்னாவின் நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக ஆனந்தராஜை குத்தினர்.
இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த ஆனந்த்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதையடுத்து அங்கிருந்து பிரசன்னா அவரது நண்பர்கள் தப்பி சென்றுவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஆனந்தராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மாங்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆனந்தராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலைக்குக் காரணமான கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்னா, கணேஷ், விஜய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.