பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் பலி: எச்சரிக்கை பதாகைகள் இல்லாததால் நடந்த விபத்தா?மின்வாரியம் விளக்கம்

பூந்தமல்லி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியத்தால் தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் இளைஞர்கள் இருவர் தவறி விழுந்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
சாலையோர பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு
சாலையோர பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்புபுதிய தலைமுறை

பூந்தமல்லியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மின்சார வாரியம் சார்பில் உயரழுத்த கேபிள் புதைக்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்ற இளைஞர்கள் இருவர் அந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார்; மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.

நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெற்ற இடத்தில் அதற்கான எச்சரிக்கை பதாகைகள், மின்விளக்குகள் வைக்கப்படாததே விபத்துக்கான காரணமென சொல்லப்பட்டது. இருப்பினும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணமென காவல்துறை தரப்பு மின்வாரியத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் ‘எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன’ என்று மின் வாரியமும் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்படும் குழிகளும்.. அதனால் ஏற்படும் விபத்துகளும்..

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்க பணி, மழைநீர் வடிகால்வாய் மற்றும் மின்சார வாரியம் சார்பில் உயரழுத்த புதைவட கேபிள் இணைக்க ராட்சத கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நடைபெறும் பகுதிகளில் போதிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படாததால் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் பல சமயங்களில் ஏற்படுகின்றன. மேலும் இப்பணிகளினால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை பணி
பூந்தமல்லி நெடுஞ்சாலை பணி

இதில் நேற்று பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த குணா (22), தன் நண்பர் மதிவாணன் என்பவருடன் பைக்கில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குணா பூந்தமல்லியில் உள்ள மின் பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அலுவலகத்துக்கு அருகேயே அறையெடுத்து தங்கியுள்ளார் அவர். நேற்றிரவு நைட் ஷிப்ட் வேலைக்கு சென்ற இவர், இருசக்கர வாகனத்தில் நண்பன் மதிவாணனுடன் சென்னீர்குப்பத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் உயர் அழுத்த கேபிள் இணைப்பு தருவதற்காக ராட்சத தடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது.

20 அடி அகலம்.. 10 அடி ஆழமான பள்ளத்திற்கு எச்சரிக்கை பாதாகை இல்லை!

சுமார் பத்து அடி ஆழம் 20 அடி அகலம் கொண்ட இந்த பள்ளத்தில் கால்வாய் போல அமைக்க கம்பிகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அங்கு சாலை மூடப்பட்டுள்ளது என எந்த எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் கரும் இருட்டில் இருந்துள்ளது அந்த சாலை. இதனால் வாகனம் ஓட்ட சிரமப்பட்டதாக சொல்லப்படும் குணாவும் அவர் நண்பரும், நேரடியாக ராட்சத பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினர்.

Guna
Guna

இவ்விபத்தில் கம்பிகள் குத்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்ட குணா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். பலத்த காயங்களுடன் மதிவாணன் மீட்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்து போன குணாவின் உடலை கைப்பற்றிய ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை பணி
பூந்தமல்லி நெடுஞ்சாலை பணி

கால்வாய்கள் போன்ற ராட்சத பாலங்கள் தோண்டும்பட்சத்தில் போதிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்காததே இப்படியான விபத்துகளுக்கு காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அவர்கள் கூறுகையில், “இந்த நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெறும் பகுதியில் இரவில் ஒரு விளக்கு கூட எரிவதில்லை. பணிகள் நடைபெறுவதாக தெரியாததால் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. எந்த ஒரு எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்படுவதில்லை. இனியாவது முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மின்வாரியம் தரப்பில், “அப்பகுதியில் உரிய அளவில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தோம்” என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. “இளைஞர்கள் மது அருந்திவிட்டு வந்ததே விபத்துக்கு காரணம்” என்று காவல்துறை தெரிவித்திருப்பதாகவும் மின்வாரியம் சார்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com