தற்கொலை செய்யும் வீடியோவை டிக்டாக் செயலியில் வெளியிட்ட மனைவி ! இறந்துபோன பரிதாபம்
டிக்டாக் என்பது பொழுதுபோக்கிற்கான செயலி என்பதை உணராமல் பலரும் அதற்கு அடிமையாகி வீடியோக்களை பதிவேற்றம் செய்வதையே முழுமூச்சாக கொண்டுள்ளனர். அதன்படி பெரம்பலூர் அருகே, பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலியை பயன்படுத்த தொடங்கி அதற்கே அடிமையாகி தனது குழந்தைகள், குடும்பத்தை கவனிக்காமல் அதன் மூலமாக இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சீராநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அனிதாவின் கணவர் பழனிவேல் சிங்கப்பூரில் கடந்த ஒருவருடமாக பணிபுரிந்து வருகிறார். கணவர் அருகில் இல்லாத காரணத்தால் தனிமையில் தவித்து வந்த அனிதாவிற்கு டிக்டாக் செயலி ஆறுதலை தந்துள்ளது. அனிதாவிற்கு டிக்டாக் மீதான ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கே அடிமையாகி போனார் என்றும் கூறப்படுகிறது.
அனிதா, பாடியும் ஆடியும், நடித்தும் டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோக்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல். அவரின் வீடியோவை பலரும் பாராட்ட குழந்தைகளை கூட கவனிக்காமல், வீடியோ எடுப்பதற்காகவே ஒவ்வொரு நாளையும் கடத்தியுள்ளதாக தெரிகிறது. இதனை கணவர் பழனிவேல் கண்டித்ததால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதன்படி களைக்கொள்ளி மருந்தை குடித்து, தற்கொலைக்கு முயன்று அதையும் வீடியோ எடுத்து டிக்டாக்கில் தனது கடைசி வீடியோவாக அனுப்பியுள்ளார் அனிதா. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனிதாவை அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
நடந்தது அறியாமல் அனிதாவின் இரண்டு பிள்ளைகளும் தாயின் அரவணைப்பிற்காக ஏங்கி நிற்கின்றனர். டிக்டாக் உள்ளிட்டவைகளை அதிகமாக பயன்படுத்துவோர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறும் அரசு மனநலமருத்துவர் மினத்துல் மிஸ்தா, அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வுடன் விடுபடவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
டிக்டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துவோர் குடும்பத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து அதில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும் டிக்டாக் வீடியோக்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்ப்புள்ளது என்பதும் சமூக ஆர்வலரின் கருத்து. டிக்டாக் செயலியை தனிமையில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தும்போது அதில் அடிமையாகிவிடாமல் இருப்பதற்காக வேறு வேலையில் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பது அவசியம். சீராநத்தம் அனிதா போல் பலரும் டிக்டாக்கில் சிறைபட்டிருக்க வாய்ப்புண்டு என்பது நிதர்சனம். பாதுகாப்பு பொறுப்பு ஆகியவற்றை அறிந்து டிக்டாக்கை அளவோடு பயன்படுத்துவதே அனைவருக்கும் நலம்.