பேக்கரி வேலைக்கு வந்த இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 2 பேர் கைது
கோவைக்கு பேக்கரி வேலைக்கு வந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், பேக்கரி உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு உரிமையாளரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
கேரளாவை சேர்ந்த மொய்தீன் குட்டி உட்பட 3 பேர் சேர்ந்து கோவை அருகே பேக்கரி ஒன்றை நடத்திவருகிறார்கள். இங்கு வேலைக்காக ஒருமாதத்திற்கு முன் 21 வயது இளம் பெண் ஒருவர் கணவருடன் வந்துள்ளார். கொரோனா காரணமாக பேக்கரி மூடப்பட்டதால் அந்த பெண்ணின் கணவர், அருகே மில் ஒன்றில் பணிக்குச் சென்றுள்ளார். கேரளாவில் உள்ள தோட்டத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, கணவன், மனைவி இருவரையும் பேக்கரி அருகே உள்ள வீட்டில், உரிமையாளர் மொய்தீன் குட்டி தங்க வைத்துள்ளார். பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதை பயன்படுத்தி, பேக்கரி உரிமையாளர்களான மொய்தீன் குட்டி, சமீர் மற்றும் சிகாபுதீன் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெளியே சொன்னால் கணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கணவரிடம் அந்த பெண் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், பேக்கரி உரிமையாளர்களான பாலக்காட்டை சேர்ந்த சமீர் மற்றும் சிகாபுதீன்ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டியை தேடி வருகின்றனர்.