ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர்
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டு ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட் பாரத்தில் ஒரு இளம்பெண்ணும், ஒரு இளைஞரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த பெண்ணை வெட்டியுள்ளார். கழுத்தில் காயம்பட்டு அந்த பெண் கீழே சரிந்துள்ளார்.
பெண்ணை அரிவாளால் வெட்டிய உடன், அந்த பிளாட் பாரத்தில் வந்த ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரயிலில் அடிபட்டு அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் கழுத்தில் காயம் ஏற்பட்ட இளம் பெண் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல், காயமடைந்த இளைஞருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம் பெண்ணையும் இளைஞர் ஒருவர் கத்தியால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.