ஆந்திர ரயில்வே தண்டவாளத்தில் தமிழக காதல் ஜோடிகள் உடல்கள் கண்டெடுப்பு
ஆந்திர ரயில்வே தண்டவாளத்தின் அருகே தமிழகத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடிகளின் உடல்களை போலீசார் கண்டறிதுள்ளனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் குப்பம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே அடையாளம் தெரியாத இருவரின் உடல்கள் ரயிலில் அடிப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற ரயில்வே போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது: “திருவள்ளூர் மாவட்டம் எட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த மோனிஷாவும், ஹேமாநாத்தும் காதலித்து வந்ததாக தெரிகிறது. மோனிஷா வேலூரில் இளங்கலை பட்டம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று மதியம் கல்லூரியை விட்டு வெளியேறிய அவர், அதன் பின்னர் ஹேமாநாத்தை சந்தித்துள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி அளவில் அவர்களின் உடல்கள் குப்பம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் வரவில்லை. வேறு எந்த தகவலும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று கொண்டு வருகிறது. காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.” இவ்வாறு தெரிவித்தனர்.

