ஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் !
அரக்கோணம் அருகே ஆண்டுக்கு ஒருமுறை கிராமத்தை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையில் சுமார் 2000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். நெசவுத் தொழிலை பிரதானமாகக் கொண்ட இந்த கிராம மக்கள் தங்களது கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் நோக்கத்தில், ஆண்டுக்கு ஒரு முறை இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று கூடி 2 ,3 குழுக்களாக பிரிந்து கிராமத்தில் உள்ள ஏரி , கால்வாய், கிணறு, குளம், குட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பை கூளங்களை அகற்றுவதில் இவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இதில் முதல் கட்டமாக தெருக்களில் உள்ள கால்வாய்களில் தூர்வாருதல், பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்தில் உள்ள பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் குடிநீர் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. வாரத்தின் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.