மதுராந்தகம் ஏரியில் ஆபத்தை அறியாமல் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்!
நிவர் புயலையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வரும் நிலையில் ஆபத்தை அறியாமல் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் செல்ஃபி எடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி உருவாக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம். இம்மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரிதான். தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏரி முழு கொள்ளளவை இன்னும் ஓரிரு நாட்களில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2411 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்கும் தன்மைக்கொண்டது. இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில், தற்போது பெய்த மழையால் 20 அடியை எட்டியுள்ளது. ஏரியின் நீர்வரத்து 694 கன அடி கொள்ளளவில் தற்போது 448 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு முழு கொள்ளளவை தொட்ட நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரிக்கு சுமார் 1500 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஏரியை பார்க்க பொதுமக்கள் குழந்தைகள் பெரியவர்கள் என கூட்டம் கூட்டமாக வருவது மட்டுமல்லாமல் ஆபத்தை அறியாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டும் பார்வையிடுகின்றனர். ஏற்கனவே, செல்ஃபி எடுத்து பலர் பல மாநிலங்களில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், பொதுப்பணித்துறையினரும் காவல்துறையினரும் ஏரியில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.