சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்
பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி பைக் சாகசம் செய்து வருகின்றனர். அந்த இளைஞசர்கள் சாலையின் நடுவே தங்களது உயர்ரக வாகனத்தை செங்குத்தாக தூக்கி ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கி வருகின்றனர்.
மேலும் அந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால் இதுபோன்ற சம்பவங்கள் நேரிடுவதாக குற்றச்சாட்டு ஏழுந்துள்ளது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை சர்வீஸ் ரோட்டில் கனரக வாகன டிரைவர்கள் தங்குவதற்காக யார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இந்த வாலிபர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்
அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் தற்போது வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

