எந்நேரமும் மயக்கத்திலேயே வைத்திருக்கும் மாத்திரைகளை மாணவர்களுக்கு விற்ற இளைஞர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எந்நேரமும் மயக்க நிலையிலேயே வைத்திருக்கும் மாத்திரைகளை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 104 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் மதுரையைச் சேர்ந்த தீபக்ராஜ்(25) என்பதும், தற்போது அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதும், பள்ளி மாணவர்களுக்கு எந்நேரமும் மயக்க நிலையிலேயே வைத்திருக்கும் மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அந்த மாத்திரைகளை அவர் ஆன்லைனில் வாங்கியது தெரியவந்தது. இதனையடுத்து 104 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் தீபக்ராஜை கைது செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு மயக்க நிலையில் வைத்திருக்கக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.