இளம் தொழில்முனைவோராக ஒளிரும் மாற்றுத்திறனாளி பெண்...!
கோவையில் நோயால் உடல்திறன் முடங்கிய இளம்பெண், காகித கலைப்பொருட்களை செய்து தொழில்முனைவோராக சாதித்து வருகிறார்.
கோவை மாவட்டம், பாப்பம்பட்டியைச் சேர்ந்த ராதிகாவுக்கு 6 வயதில் எலும்பில் ஏற்பட்ட பிரச்னையால் நடக்க முடியாமல் போனது. பல அறுவை சிகிச்சைகள், தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயங்களால் முடங்கிப்போன ராதிகா, தனது சகோதரன் மற்றும் பெற்றோரின் ஊக்கத்தால் கலைப்பொருட்களை செய்யத் தொடங்கினார். இவர் கைகளில் காகிதங்கள் அழகிய பொம்மைகளாக, கூடைகளாக, அலங்காரப்பொருட்களாக உருமாறி வருகின்றன.
காகித கலைப்பொருட்களின் நேர்த்தியாலும், வசீகரத்தாலும் கவரப்பட்ட பலர், ஆர்வத்துடன் ஆர்டர்கள் கொடுப்பதால் இப்போது ராதிகா இளம் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளார்.
வீட்டில் இருந்தபடியே 11-ஆம் வகுப்பு படித்து வரும் ராதிகா, தனது நம்பிக்கையாலும், உழைப்பாலும் கலையாலும், சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்தி காட்டி வருகிறார். கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்களில் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் ஒளிர்கிறார் ராதிகா.