பைக் ஓட்ட பழகியபோது விபத்து - இளம்பெண் உயிரிழப்பு

பைக் ஓட்ட பழகியபோது விபத்து - இளம்பெண் உயிரிழப்பு

பைக் ஓட்ட பழகியபோது விபத்து - இளம்பெண் உயிரிழப்பு
Published on

குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகும்போது விபத்து ஏற்பட்டதில் இளம்பெண் உயிரிழந்தார்.

குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் இறந்து கிடப்பதாகவும், வாலிபர் ஒருவர் காயங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதில் காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காயமடைந்தவர் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த அண்ணாமலை(21), என்பதும் இறந்துபோன பெண் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்த அபிநயா(20), என்பதும் தெரியவந்தது. காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் ஷோரூமில் அபிநயா கடந்த சில வாரங்களாக வேலை செய்து வந்துள்ளார். அங்கு செல்லும்போது அபிநயா உடன் அண்ணாமலைக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் பழகி வந்துள்ளார்.

தற்போது அபிநயா அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டதால் இதுவரை வேலை செய்ததற்கான சம்பள பணத்தை வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு நேற்று அபிநயா வெளியே சென்றுள்ளார். குன்றத்தூரில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த அண்ணாமலை, அபிநயாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அபிநயாவுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி கொடுப்பதாக கூறி அபிநயாவை மோட்டார் சைக்கிளை ஓட்ட வைத்து விட்டு பின்னால் அண்ணாமலை அமர்ந்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் உள்ள கம்பியின் மீது மோதியதில் அபிநயா முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அபிநயா பரிதாபமாக இறந்து போனார். அண்ணாமலைக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com