நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்கு: அப்படியெல்லாம் இனி சொல்ல முடியாது – என்ன காரணம்?

நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்கு: அப்படியெல்லாம் இனி சொல்ல முடியாது – என்ன காரணம்?
நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்கு: அப்படியெல்லாம் இனி சொல்ல முடியாது – என்ன காரணம்?

கழுதை பண்ணை அமைத்து மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்.

கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என இனி வருங்காலத்தில் யாரையும் திட்ட முடியாது. பட்டதாரி இளைஞர் ஒருவர் முசிரி அருகே கழுதை பண்ணை அமைத்து அதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.

முசிரி அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ஐந்திணை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையை நிர்வகித்து வருபவர் பட்டதாரி இளைஞர் ராஜு. இவர் தனது ஐந்திணை பண்ணையில் 45 கழுதைகளை வளர்த்து வருகிறார். இந்த கழுதை பண்ணையில் ஆன்லைன் மூலம் 1 லிட்டர் கழுதைப்பால் ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து கழுதை பண்ணை உரிமையாளர் ராஜுவிடம் கேட்டபோது...

இந்த பண்ணையில் 45 கழுதைகள் பராமரிக்கப்படுகிறது. இதில், 7 கழுதைகள் பால் கறக்கிறது. கழுதைப்பால் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் கழுதை பாலை குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கால்சியம் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கழுதைப்பாலை கொடுக்கலாம். கழுதைப் பாலில் குறைந்த அளவே கொழுப்பு சத்து உள்ளது. 100 கிராம் பாலில் வெறும் 8.6 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு கழுதைப்பால் சிறந்த பானமாகும். கழுதைப் பாலில் விட்டமின் ஏபி-1, பி-2, சி ஆகியவை உள்ளது. பல சித்த மருத்துவர்கள் கழுதைப் பாலை வாங்கிச் செல்கின்றனர். கழுதைப்பால் எளிதில் கெட்டுப் போகாது. பாலை ஃப்ரீசரில் வைத்து மாதக்கணக்கில் பயன்படுத்த முடியும்.

ஒரு கழுதை நாளொன்றுக்கு காலை 200 மில்லி மாலை 200 மில்லி அளவில் பால் கறக்கும் தன்மை கொண்டது. காலையில் மட்டும் கழுதையின் பாலை கறந்து கொண்டு மாலை அதன் குட்டிக்கு விட்டு விடுவோம். கழுதைப்பால் லிட்டர் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.

எனது பண்ணையில் கழுதை பால் மூலம் சோப்பு தயார் செய்யப்படுகிறது. அழிவின் விளிம்பில் இருந்த கழுதை இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒரு சில கழுதைகள் வாங்கி வளர்த்து வந்தேன். அதனைத் தொடர்ந்து கழுதையினால் கிடைக்கும் பலன்களை அறிந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்குச் சென்று கழுதைகளை விலைக்கு வாங்கிவந்தேன்.

நான் கழுதை மேய்ப்பதை பார்த்த சிலர் சிரித்து கிண்டல் செய்தவாறு செல்வார்கள். அவர்களுக்கு கழுதையினால் கிடைக்கும் பயன்கள் தெரிவதில்லை. என்னிடம் வளர்க்கப்படும் கழுதைகளிடம் இருந்து பால், லத்தி (சாணம்), உதிரும் முடி என அனைத்தும் பணமாகும். ஆன்லைன் மூலமும், நேரிலும் கழுதைப் பால் சிறப்பான முறையில் விற்பனை ஆகிறது.

கழுதை லத்தி அதாவது சாணத்திலிருந்து சாம்பிராணி, கொசு விரட்டி ஆகியவை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். கழுதைப்பால் மூலம் பிஸ்கட், குளியல் சோப் ஆகியவையும் தயார் செய்யப்படுகிறது, கழுதை பால் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு தோலில் ஏற்படும் அலர்ஜி பாதிப்பை போக்க வல்லது. மேலும் கழுதை கோமியமும் விற்பனை செய்யப்படுகிறது.

கழுதையின் உடலிலிருந்து உதிரும் ரோமத்தை தாயத்தில் அடைத்து குழந்தைகளுக்கு கட்டி விடுவதால் பயந்த கோளாறு பாதிப்பு இருக்காது என கிராமப்புறங்களில் நம்பப்படுகிறது. இதற்காக கழுதை முடிகளை சிலர் வாங்கிச் செல்வதுண்டு.

என்னிடம் ஏழு கழுதைகள் தற்போது பால் கறக்கிறது. இதன் மூலம் மாதந்தோறும் 30 லிட்டர் கழுதை பால் விற்பனை செய்கிறேன். இதன் மூலம் எனக்கு கிடைக்கும் வருமானம் 90 ஆயிரம், கழுதை லத்தி குறைந்தபட்சம் 50 கிலோ விற்பனை செய்கிறேன். லத்தியிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். .கழுதை கோமியம் விற்பனையில் இருந்து ரூபாய் ஐந்தாயிரம் கிடைக்கும். ஆகமொத்தம் என்னுடைய மாத வருவாய் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் என்றார்.

அழிந்துவரும் விலங்கினமான கழுதை இனத்தை மீட்டு வாழ வைக்கும் முயற்சியில் இறங்கிய என்னை கழுதைகள் வாழ வைக்கிறது. இது போக நான் நான்கு பேருக்கு கழுதைகளை பராமரிப்பதற்காக வேலை கொடுத்துள்ளேன் என்று கூறினார்.

என்னைப்பார் யோகம் வரும் என கடைகளிலும், வீடுகளிலும் கழுதைகளின் படத்தை மாட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், பட்டதாரியான ராஜு நிஜத்திலேயே கழுதை வளர்த்து பணம் சம்பாதிக்கும் யோகக்காரராக மாறியுள்ளதை கண்கூடாக காணமுடிகிறது. இளைஞர்கள் மற்றும் வேலை இல்லாதோர் கழுதை பண்ணை அமைப்பதற்கு உதவுவதாகவும் ராஜு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com