தஷ்வந்த் யாரையும் கொல்ல தயங்க மாட்டார்: ஹாசினியின் தந்தை வேதனை
என் மகளை கொலை செய்த தஷ்வந்த் வெளியே வந்தால் மீண்டும் யாரையும் கொல்ல தயங்கமாட்டார் என சிறுமி ஹாசினியின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூர் அருகே உள்ள மதனநந்தபுரம் பகுதியில் வசித்து வந்த ஏழு வயது சிறுமி ஹாசினியை, பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த், கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால், தஷ்வந்தால் ஜாமீனில் வெளிவரமுடியவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததால், அவருக்கு எளிதாக ஜாமீன் கிடைத்தது. தனது மகளை கொடூரமாக கொலை செய்த தஷ்வந்திற்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஹாசினியின் பெற்றோர்களுக்கு இச்சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. மேலும், தஷ்வந்த்-க்கு ஜாமீன் கொடுத்ததற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹாசினியின் தந்தை, “எனது மகளை கொலை செய்தவர் வெளியே வந்தால் மீண்டும் பலரை கொல்ல தயங்கமாட்டார். எனது மகள் மரண சம்பவத்தில் இருந்து எனது மனைவி இன்னும் வெளிவரவில்லை. கொலை செய்தவரின் தந்தையோ, எப்படியும் என் மகனை வெளியே கொண்டு வந்தவிடுவேன் என சவால் விடுகிறார். கொடூர கொலை செய்தவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். என் குழந்தைக்கு நேர்ந்த கொடுமைபோல் மீண்டும் எந்தவொரு குழந்தைக்கும் ஏற்படக் கூடாது” என்றார்.
அப்போது பேசிய நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன், “குழந்தைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இருப்பினும் ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றால், அதற்கு உச்சபட்ட தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில்தான் அடுத்தது, இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாது” என்றார்.