“பெண்கள் படம் வரைவதில் கண்ணியம் குறையாதவர்..” ஓவியர் மாருதி மறைவு குறித்து எழுத்தாளர் தமிழ்மகன்

பிரபல ஓவியர் மாருதி, உடல்நலக் குறைவினால் இன்று (ஜூலை 27) காலமானார்.
ஓவியர் மாருதி, எழுத்தாளர் தமிழ்மகன்
ஓவியர் மாருதி, எழுத்தாளர் தமிழ்மகன்புதிய தலைமுறை

ஓவியங்களையே உயிராகத் தரக்கூடிய ஓவியர்களில் ஒருவராக விளங்கியவர் மாருதி. இவருடைய ஓவியங்களை ரசிக்காதவர்களே உலகில் இருக்க முடியாது. அப்பட்டிப்பட்ட ஓவியக் கலைஞராக விளங்கிய மாருதி (86), இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஓவியர் மாருதி
ஓவியர் மாருதி

ஓவியர் மாருதியின் மறைவு குறித்து பிரபல எழுத்தாளர் தமிழ்மகனிடம் பேசினோம். அவர், “அவர் ஃப்ரெஷால் வரையக்கூடிய ஓவியர். நிறைய ஓவியர்கள் பேனாவால் முதலில் வரைந்து, பின்பு கலர் வாஷ் செய்வார்கள். ஆனால், ஓவியர் மாருதி, அனைத்து ஓவியங்களையுமே ஃப்ரெஷால் வரையக்கூடியவர். இன்னும் சொல்லப்போனால், அவருடைய சிறப்பே, அவரது கையெழுத்தை ஃப்ரெஷால் போடுவதுதான். வாஷ் டிராயிங் என்று சொல்லப்படக்கூடிய ஓவியத்தில் இவர் கைதேர்ந்தவர். இதில் நிறைய ஆச்சர்யங்களையும் புதுமைகளையும் படைத்தவர். அவர் ஃப்ரெஷ் கொண்டு வரையும் பெண்களின் படம் ஒளிரும் தன்மை கொண்டது.

குறிப்பாக, பெண்களின் தலைமுடி, இமைகள் போன்றவை நிஜமாகவே ஒளிர்வதாகவே இருக்கும். அவருடைய வாஷ் டிராயிங் ஓவியங்களில், பிரபல ஓவியர் ரவி வர்மாவின் சாயல் இருக்கும். இதை நுணுக்கமாக எடுத்துக்கொண்டு பிரபல வார, மாத இதழ்களின் படங்களுக்கு எல்லாம் உயிரூட்டினார். அவர் வரையாத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லலாம். நிறைய பத்திரிகைகள் வெளியிட்ட தீபாவளி மலர், பொங்கல் மலர் சிறப்பு இதழ்களுக்கு எல்லாம் இவர்தான் அட்டைப்படம் வரைந்திருப்பார். பண்டிகைகளுக்குரிய சிறப்பு எஃபெக்ட் கிடைக்கும் என்பதாலேயே இவரிடம் வரையக் கொடுப்பார்கள்.

எழுத்தாளர் தமிழ்மகன்
எழுத்தாளர் தமிழ்மகன்

குறிப்பாக, ’தேவியின் கண்மணி’ என்ற இதழ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அவர்தான் அட்டைப்படம் வரைந்துகொண்டிருந்தார். இதில் எத்தனையோ பெண்கள் படங்களை வரைந்திருந்தாலும், அவையனைத்தையும் மிகக் கண்ணியத்துடன் வரையக்கூடியவர். இறுதிவரை யாரிடமும் இறங்கிப்போய் வாய்ப்பு கேட்காமலேயே இருந்தார். வாய்ப்பு வந்தால் வரைந்து கொடுப்பார். சுயமரியாதைக்காரர்.

நேர்மையாகவும் அன்பாகவும் எளிமையாகவும் பழகக்கூடிய நல்ல மனிதர். அவருடைய மனைவி உடல்நிலையால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவருக்கான தேவைகள் அனைத்தையும் செய்தவர் மாருதிதான். அவருடைய உதவிக்கு ஓர் செவிலியரைக்கூட வைக்கவில்லை.

மாருதியின் ஓவியங்கள்
மாருதியின் ஓவியங்கள்

கூடவே இருந்து இவரே பார்த்துக்கொண்டார். கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் அவருடைய மனைவி இறந்துபோனார். ’விகடன்’ குழுமத்திற்காக பிரபல 20 ஓவியர்கள் ஒன்றிணைக்கப்பட்ட விழா ஒன்று நடைபெற்றது. அதில் மாருதியும் கலந்துகொண்டார். அன்றுதான் நான் அவரைக் கடைசியாகச் சந்தித்தேன்” என்றார் வேதனையுடன்.

புதுக்கோட்டையில் பிறந்து, ரங்கநாதன் என்ற பெயரைக் கொண்ட அவர், பத்திரிகைகளில் ’மாருதி’ என்ற பெயரில் ஓவியங்களை வரைந்து புகழ்பெற்றார். விமலா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஓவியர் மாருதிக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி புனேவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு இவருக்குக் கலைமாமணி விருது சிறப்பித்துள்ளது. ஓவியர் மாருதியின் மறைவு, ஓவியர்கள் மற்றும் பத்திரிகை வாசகர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com