கருணாநிதியின் பேரன்புக்குரியவர் எழுத்தாளர் சா.கந்தசாமி - ஸ்டாலின்

கருணாநிதியின் பேரன்புக்குரியவர் எழுத்தாளர் சா.கந்தசாமி - ஸ்டாலின்
கருணாநிதியின் பேரன்புக்குரியவர் எழுத்தாளர் சா.கந்தசாமி - ஸ்டாலின்

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார். அவருக்கு வயது 80.

1940 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் சா.கந்தசாமி பிறந்தார். 1968ல் இவர் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இந்த புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. 1998ல் விசாரணைக் கமிசன் என்ற புதினத்திற்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வென்றவர்

இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது மகன் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “சாயாவனம் என்ற புதினத்தின் வாயிலாகத் தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி - சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைகிறேன்.

எழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவர் சா.கந்தசாமி. இன்றைய நிலையில் அவருடைய கருத்தும் படைப்பும் மிகவும் தேவைப்படும் சூழலில் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார்.

நாட்டுப்புறவியலையும், நவீன இலக்கியக் கூறுகளையும் சமமான அளவில் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய சா.கந்தசாமி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய அன்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com