பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சென்னையில் நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 64.
கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஞாநி, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து சென்னை, கே.கே.நகரில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஞாநிக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மனுஷ் நந்தன், கமலின் மன்மதன் அம்பு, யான் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பத்திரிகையாளர் , எழுத்தாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்ட ஞாநியின் இயற்பெயர் சங்கரன். 1954ல் செங்கல்பட்டில் பிறந்தார். இவரது தந்தை வேம்புசாமியும் பத்திரிகை துறையில் பணிபுரிந்ததால், ஊடகத்தின் மீது பற்று ஏற்பட்டு பத்திரிகை துறைக்கு வந்தார். ’பரீக்ஷா’ என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. கடந்த 2014-ல் ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், பின்பு அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த ஒரு வருடமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் ஞாநி.
அவரது வீட்டு முகவரி:
எண் 39, (பத்மசேஷாத்ரி பள்ளி அருகில்) அழகிரிசாமி சாலை, கே.கே.நகர், சென்னை- 78