எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு
இந்த ஆண்டு எழுத்தாளர் ப.காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருதும், எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும். இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழ் மொழிக்கான 2022-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால சாகித்ய புரஸ்கார் விருது 'மல்லிகாவின் வீடு' என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார விருது, 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதை தொகுப்புக்காக, எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் பி.காளிமுத்து எழுதிய இந்த நூல், கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இது காளிமுத்துவின் முதல் நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சிறந்த நூலாக ஆர்.ராஜேந்திரன், டி.பெரியசாமி, எம்.வான்மதி ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு பெரும்பான்மையின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், விருதும் வழங்கப்படும்.