
மகளிர் உரிமைத்தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், புதிதாக இணைந்துள்ள சகோதரிகளுக்கு என் அன்பும், வாழ்த்தும் என அமைச்சர் உதயநிதி தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' மூலம் முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிர் பயனடைந்து வரும் நிலையில், புதிதாக இணைந்துள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
நம்மால் இதை செய்ய முடியாது என்றவர்கள் கூட நம்மை பின்பற்றி தேர்தல் வாக்குறுதி தருகிற அளவுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சாதனைப் படைத்து வருகிறது. இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இத்திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள சகோதரிகளுக்கு என் அன்பும், வாழ்த்தும் என அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.