அவமானம்.. மன உளைச்சல்.. விதவை தாயின் தற்கொலையால் தவிக்கும் குழந்தைகள்..!
மதுரை அருகே மன உளைச்சலால் விதவைப் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மூன்று குழந்தைகளும் தற்போது பெற்றோரை இழந்து தவிக்கும் நிலையில் இளம்பெண்ணை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் அவரது தாய் கஷ்டப்பட்டிருக்கிறார்.
மதுரை மாவட்டம் குலமங்கலத்தை சேர்ந்தவர் முத்துமாரி. வயது 26. கடந்த சில வருடங்களுக்கு முன் கண்ணன் என்பவருக்கும் முத்துமாரிக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணம் ஆன நாள் முதலில் இருந்தே கணவர் கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் வருமானம் போதிய அளவில் இல்லை. வெயிலுக்கும், மழைக்கும் தாங்காத ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தம்பதியினருக்கு மொத்தமாக 3 குழந்தைகள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குடிப்பழக்கம் கொண்ட கணவர் கண்ணன் இறந்துவிட்டார். பாதுகாப்பான வீடு இல்லை. பெற்ற 3 குழந்தைகளுக்கும் போதிய சாப்பாடு இல்லை. வறுமையின் பிடியில் தவித்திருக்கிறார் முத்துமாரி. இந்நிலையில் முத்துமாரியின் உறவினரான முத்துபாண்டி கஷ்டப்படும் முத்துமாரிக்கு அவ்வப்போது சிறிய சிறிய உதவிகளை செய்து வந்திருக்கிறார். முத்துமாரியின் குழந்தைக்கு சாப்பாடு வாங்கித் தருவது, அவர்களுக்கு ஆடை எடுத்துக் கொடுப்பது மட்டுமின்றி முத்துமாரிக்கும் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இதனால் முத்துமாரியும் முத்துப்பாண்டியுடன் நெருங்கி பழகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனைக்கண்ட முத்துமாரியின் தாய், தனது மகளை கண்டித்திருக்கிறார். மேலும் இந்த விஷயம் ஊர் மக்களுக்கும் தெரியவந்திருக்கிறது. இதனை அறிந்த முத்துமாரி சோகத்தில் மூழ்கியிருக்கிறார். போதிய சாப்பாடு இல்லை. உடுக்க உடை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலே ஊர் மக்கள் மத்தியில் அவமானம்.. இந்த வேதனையில் இருந்த முத்துமாரி, முத்துப்பாண்டியோடு சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார். முத்துமாரி உயிரிழந்துவிட முத்துப்பாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே தன் மகளின் இறுதிச் சடங்கை செய்யக்கூட பணம் இல்லாமல் தவித்ததாக கூறும் முத்துமாரியின் தாய், 3 குழந்தைகளின் வாழ்விற்கு அரசாங்கம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனவும்கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே கணவரை இழந்து குழந்தைகளோடு தவிப்பவருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் சொந்த காலில் நிற்பதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.