போலீசாரால் விபத்தில் சிக்கிய இளம்பெண் : சிகிச்சை பெற்று வீடு திரும்பி தற்கொலை
செங்குன்றம் அருகே போலீசாரால் சாலை விபத்தில் சிக்கிய பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை செங்குன்றம் அடுத்த சிவந்தி ஆதித்தன் நகர், ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் யுவனேஷ். இவரும் இவரது மனைவி பிரியதர்ஷினியும்(25) கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி மாலை செங்குன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, காந்திநகர் போலீஸ் பூத் அருகே இருந்த போலீசார் அவர்களை வழிமறித்துள்ளனர்.
இதில் நிலைதடுமாறி வண்டியில் இருந்து கீழே விழுந்த பிரியதர்ஷினி மீது பின்னால் இருந்த வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரியதர்ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விபத்துக்கு காரணமான போலீஸாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், போலீஸ் பூத் அருகே இருந்த போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திநகர், சிவந்தி நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.