மாணவர்கள், பெண்கள் மீது மரியாதை வைத்து சகோதரிகளாக பாதுகாக்க வேண்டும் - இயக்குநர் சமுத்திரக்கனி
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டின் பேரில் அரியலூர் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 3000-த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? வாங்க பேசலாம் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், இயக்குநர் சமுத்திரக்கனி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர். அப்போது நடிகர் சமுத்திரக்கனி; பேசியபோது...
நான் ஒவ்வொரு கதையை எழுதும் போதும் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து விட்டுதான் எழுதுவேன்:.
ஒருமுறை தான் விட்டுப் பாடம் எழுதாமல் பள்ளிக்கு வந்தேன். பின்னர் கதையாக எழுதி எனது நோட்டை கடைசியாக வைத்தேன். ஆனால், ஆசிரியர் முதலில் எனது நோட்டை எடுத்து நான் எழுதியிருந்த கதையை படித்து விட்டார். அதன் பின்பு அவர் அந்த நோட்டை என்னிடம் கொடுத்து மாணவர்கள் மத்தியில் சத்தமாக படிக்கச் சொன்னார். நானும் பயந்து கொண்டே படித்தேன். பிறகு சக மாணவர்களிடம் என்னை பாராட்டி கை தட்டச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். அந்த ஆசிரியரால் தான் தற்போது இயக்குநராக வளர்ந்துள்ளேன். நான் ஒவ்வொரு கதையை எழுதும் போதும் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டுதான் எழுதுவேன்.
மாணவர்கள், பெண்கள் மீது மரியாதை வைக்க வேண்டும்:
செல்போனை அதிகமாக பயன்படுத்தாமல் டிஜிட்டல் காஸ்டிங் செய்ய வேண்டும். ஒரு நாள் செல்போன் இல்லாமல் இருக்க வேண்டும். நான் துணை இயக்குநராக இருந்தபோது மிகவும் கஷ்டப்பட்டேன் படிப்பில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. மாணவர்கள் பெண்கள் மீது மரியாதை வைக்க வேண்டும், அவர்களை சக தோழிகளாக சகோதரிகளாக பாதுகாக்க வேண்டும். இறைவன் பெண்களை விட ஆண்களை பலமாக படைத்ததற்கு காரணம் ஆண்கள் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகதான்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைத்தால் அது அறிவியல், கிடைக்கவில்லை என்றால் கடவுள் என கூறினார். அதே போல் செல்போன் அனைவரையும் அந்நியராக்கிவிட்டது. எனவே ஒரு நாள் digital fasting, mobile fasting இருக்குமாறு மாணவர்களை இயக்குனர் சமுத்திரக்கனி கேட்டுக் கொண்டார்