விபத்தில் சிக்கி விடுப்பில் சென்ற காவலர்; மீண்டும் பணியில் சேர்ந்து ஒரே மாதத்தில் நேர்ந்த சோகம்!

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் தலைமைக் காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த காவலர் பரிமளா
உயிரிழந்த காவலர் பரிமளாPT WEB

ஆம்பூர் செய்தியாளர் - இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் பரிமளா. இன்று திருப்பத்தூரில் நடப்பெற்ற காவலர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டு தனது கணவருடன் மாதனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒடுகத்துர் அருகே இவர்கள் சென்ற பைக் மீது ஆட்டோ ஒன்று மோதியுள்ளது. இதில் பைக்கின் பின் புறம் அமர்ந்திருந்த பரிமளா நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில், உயிரிழந்த பரிமளாவின் கணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பரிமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உயிரிழந்த பரிமாளவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, ஏற்கனவே இரண்டு மாதத்திற்கு முன்பு கணவருடன் காவலர் பரிமளா சென்ற போது வாகன விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 2 மாத மருத்துவ விடுப்பில் இருந்து விட்டுக் கடந்த 1 வாரத்திற்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com