"மதுரை மீனாட்சியம்மனின் ஆட்சியை போன்றது பிரதமர் மோடியின் ஆட்சி"- வானதி சீனிவாசன் பெருமிதம்

"மதுரை மீனாட்சியம்மனின் ஆட்சியை போன்றது பிரதமர் மோடியின் ஆட்சி"- வானதி சீனிவாசன் பெருமிதம்
"மதுரை மீனாட்சியம்மனின் ஆட்சியை போன்றது பிரதமர் மோடியின் ஆட்சி"- வானதி சீனிவாசன் பெருமிதம்

“மருத்துவக் கல்வியில் மாற்றம் செய்யப்பட வேண்டியது குறித்து உச்சநீதிமன்றம் கூறியது கருத்து தான். உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். அதனை தீர்ப்பாக பார்க்க முடியாது. நீட் தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும்போது பார்ப்போம்” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் ஜான்சிராணி பூங்கா பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் நலத்திட்டங்களின் கீழ் பயனடைந்த ஒரு கோடி பயனாளிகளுடன் செல்ஃபி எடுக்கும் நிகழ்வை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மகளிர் அணி மற்றும் மதுரை பெண்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் அவர். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த வானதி ஸ்ரீனிவாசனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் வானதி ஸ்ரீனிவாசன் பேசும்போது, “பிரதமர் மோடி மீனாட்சியம்மன் ஆட்சியை போன்று பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் பெயரில் 85 சதவீதம் வீடுகட்டிக் கொடுத்தவர் மோடி. பெண்களுக்கு வீடுகட்டிக் கொடுத்ததால், பெண்கள் மீது ஆண்கள் தாக்கும் சம்பவங்கள் குறைந்துள்ளதாக ஆய்வு சொல்கிறது. வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருப்பது போன்று இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் குறைந்தது 20 ஆயிரம் மகளிர் பயனாளிகளுடன் செல்ஃபி எடுத்து, அதை நமோ செயலியில் அப்லோட் செய்வோம். அப்படி ஒரு கோடி பயனாளிகள் செல்ஃபி நிகழ்ச்சியான இது, மதுரையில் நடைபெறுவதும் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை மையப்படுத்தி, பெண்கள் தலைமையை வைத்து வளர்ச்சி செய்பவர் பிரதமர் மோடி” என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்ஃபி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கிவைத்துள்ளேன். மத்திய அரசின் திட்டத்தின் மூலம் அதிகளவிலான பெண் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பயனாளிகள் தான். பிரதமர் மோடியின் ஆட்சியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில், `திமுக மக்களுக்கு திட்டங்கள் செய்துள்ளதால் ஓட்டு போடுவார்கள்’ என்றால் எதற்காக வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மக்களை அடைத்து வைக்கின்றனர்? மக்களை சுற்றுலா அழைத்துச் செல்வது போன்ற புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். திமுக அரசின் மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளது. அதை சரிகட்டப் பார்க்கிறது திமுக. ஆனால், அது நடக்காது. தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் சிறுமி கூட்டு பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். மருத்துவக் கல்வியில் மாற்றம் குறித்து உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது. உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com