போதையில் உளறிய இளைஞர்கள்.. ஒன்றரை மாதங்களுக்குப் பின் பெண் உடல் தோண்டியெடுப்பு...!
கடலூர் மாவட்டத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒன்றரை மாதத்திற்குப் பின் அந்தப்பெண்ணின் உடல், கூராய்வுக்காக தோண்டியெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் கங்கநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகத்தின் மூன்றாவது மகள் வெண்மதியின் உடல் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி வீட்டை விட்டு காணாமல் போன வெண்மதி, மறுநாள் காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். வெண்மதியை அதே ஊரைச்சேர்ந்த பிரசாந்த், விஜயகாந்த், விவேகானந்தன், இளையராஜா ஆகியோர் பெண் கேட்டு மதுபோதையில் தகராறு செய்திருந்தனர். அதை ஒரு பொருட்டாக எண்ணாமல், மகள் தற்கொலை செய்துகொண்டதாக எண்ணி அவரது குடும்பத்தினர் துயரத்தில் மூழ்கிவிட்டனர்.
வெண்மதி இறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட சூழலில், அந்த நான்கு பேரும் மீண்டும் வெண்மதி வீட்டிக்கு சென்று குடிபோதையில் தகராறு செய்துள்ளனர். அப்போது, வெண்மதியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக கூறியிருக்கின்றனர்.
மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நினைத்திருந்த வெண்மதியின் தந்தை, மகள் இறப்பு குறித்து சார் ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதையடுத்து முதுநகர் காவல்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வெண்மதி உடலை தோண்டியெடுத்து ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்கள் விரைவில் பிடிக்கப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இளம் பெண்ணை கொலை செய்து தூக்கிலிட்டதாக குடிபோதையில் கூறிய 4 இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்றரை மாதத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.