உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு!
உடல் எடையை குறைக்க மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பெண் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் நாச்சிப்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் அழகேசன். இவர் மனைவி வளர்மதி (47). இவர்களுக்கு சதீஷ்குமார், சரணயா, சங்கீதா, என 3 குழந்தைகள் உள்ளனர். வளர்மதி 150 கிலோ எடையுடன் இருந்தார். உடல் பருமனால் அவதிப்பட்ட அவர் அதைக் குறைக்க முடிவு செய்தார். இதற்காக கீழ்பாக்கம் நீயூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு ஒன்பது அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் வளர்மதி நேற்று நள்ளிரவு திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் தனது மனைவி உயிர் இழந்ததாக வளர்மதியின் கணவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். வளர்மதியுடன் சேர்த்து அவரது மகன் மற்றும் இரண்டு மகள்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் அதன் பின்விளைவுகளை எதிர்கொண்டுவருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே, ஓமலூர் அருகே பாக்யஸ்ரீ என்ற 17 வயது மாணவி, உடல் எடை குறைப்பு சிகிச்சைக் காரணமாக கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் அதே பிரச்னை காரணமாக சென்னையில் இன்னொரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.