குழந்தை பிறந்து இரண்டே வாரத்தில் உயிரிழந்த தாய்..! தவறான சிகிச்சை காரணமா..?
குழந்தை பிறந்த இரண்டே வாரத்தில் தாய் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி தீபா. நிறைமாத கர்ப்பிணியான தீபாவுக்கு கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் நேற்று தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைத்தில் அறுவை சிகிச்சை செய்த தையலை பிரித்துவிட்டு வீட்டிற்கு சென்றவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தை பிறந்த இரண்டே வாரத்தில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சிகிச்சையில் ஏதேனும் தவறு ஏற்பட்டதால் இறந்தாரா? அல்லது இயற்கை மரணமா? என உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.