உயிர்பறித்த உடல்பருமன் சிகிச்சை: என்ன சொல்கிறது மருத்துவமனை?
உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொள்ளும் லட்சத்தில் ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்படுவதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் மனைவியான 47 வயது வளர்மதி, சென்னை கீழ்பாக்கம் நியூஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறும்போது 'வளர்மதியின் குடும்பத்தில் மொத்தமாக 4 பேருக்கு ஒரே நாளில் அறுவை சிசிச்சை செய்தோம். அவர்களில் மூன்று பேர் நலமுடன் இருக்கின்றனர். வளர்மதி ஏற்கனவே 150 கிலோ எடைக்கும் மேல் இருந்தார். இதுதவிர அவருக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்தன. அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் சில சிக்கலை அடையாளம் கண்டு சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ ரீதியாக அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காமல் அரிதாக சிலருக்கு இப்படி ஏற்படுவதுண்டு. லட்சங்களில் ஒருவக்கே இந்த நிலை ஏற்படும். அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 1 வார காலம் தண்ணீர் மட்டும்தான் அருந்த முடியும். பின்னர் தான் மெதுமெதுவாக உண்ண முடியும் என எல்லாவற்றையும் தெரிவித்துவிட்ட பின்னர் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது’ என்றார்.