காவல்நிலைய படியேறி போலீசாருக்கே மிரட்டல்... போலி போலீஸ் சிக்கியது எப்படி..?
கடலூரில் எஸ்.ஐ உடையில் காவல்நிலையம் சென்ற போலி போலீஸ் ஒருவர் சிக்கியுள்ளார்.
போலீஸ் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது, காவல் அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பது எல்லாம், தமிழகத்தில் ஏற்கெனவே நடந்தவைதான். ஆனால், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம், காவல்துறை குற்ற வரலாற்றிலேயே கொஞ்சம் வித்தியாசமானது. காவல்துறை அதிகாரியின் சீருடையில், காவல்நிலையத்தின் படி ஏறிச் சென்று, காவல்துறையினருக்கே மிரட்டல் விடுத்துள்ளார் பெண் ஒருவர்.
புதன்கிழமை இரவு சிதம்பரம் அருகே நடந்த வாகன சோதனையில், சக்கரபாணி என்பவர் காவல்துறையினரிடம் சிக்கினார். மதுபோதையில் இருந்த அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், அதை காவல்நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மறுநாள் சக்கரபாணி காவல்நிலையம் வந்தார்.
ஆனால் அவர் தனியாக வரவில்லை. அவருடன் காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் மற்றொரு பெண்ணும் வந்திருந்தார். திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் என அறிமுகம் செய்து கொண்ட அவர், மிடுக்காக பேசத் தொடங்கியுள்ளார். சக்கரபாணி தனக்கு தெரிந்தவர் என்பதால், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்பத் தரவேண்டுமென மிரட்டல் விடுத்துள்ளார்.
அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவலர்கள், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதற்குப்பின் நடந்த விசாரணையில், அந்த பெண் சிதம்பரத்தைச் சேர்ந்த சூரிய பிரியா என்பதும், அவர் ஒரு போலி போலீஸ் என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. சென்னையில் கடை ஒன்றில் பணியாற்றியபோது சூரிய பிரியாவுக்கு, துணை நடிகர்கள் பழக்கமாகியிருக்கிறார்கள்.
அதை வைத்து, சினிமாக்களுக்கு பயன்படுத்தப்படும் போலீஸ் சீருடையை வாடகைக்கு எடுத்த அவர், காவல்துறை அதிகாரி எனக்கூறி பலரை ஏமாற்றி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் புனிதமாக கருதும் சீருடையை பயன்படுத்தி மோசடி செய்த பெண்ணை கைது செய்துள்ளனர்.