திருவல்லிக்கேணியில் பிரசவமான பெண்ணுக்கு கொரோனா தொற்று !
சென்னை திருவல்லிக்கேணியில் அண்மையில் பிரசவமான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி கபாலி நகர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இந்தப் பெண் முழு மாத கர்ப்பிணியாக இருந்ததால் கடந்த 27ஆம் தேதி மீர்சாகிபேட்டை பேகம் தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்போது அந்தப் பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சோதனையின் முடிவில் வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை உடனடியாக கே.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவருடன் தங்கியிருந்த குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்திவிட்டு கபாலி நகரை போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.