\
மழையில் நனைந்த ஒயர்... மாவு அரைக்க கிரைண்டரை சுத்தம்செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

மழையில் நனைந்த ஒயர்... மாவு அரைக்க கிரைண்டரை சுத்தம்செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

மழையில் நனைந்த ஒயர்... மாவு அரைக்க கிரைண்டரை சுத்தம்செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
Published on

ராஜபாளையத்தில் மாவு அரைக்க முயன்றபோது கிரைண்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஐ.என்.டி.யு.சி. நகரை சேர்ந்தவர் பாஸ்கர பாண்டியன். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ள இவரின் மனைவி பெயர் ராமலட்சுமி(45). இந்த தம்பதிக்கு வர்ஷா, விஷ்ணு சங்கர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் தனியார் கல்லூரியில் முதலாமாண்டும், மகன் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.

இன்று வழக்கம்போல கணவர் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு சென்றபிறகு ராமலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பிற்பகலில் மாவு அரைப்பதற்காக கிரைண்டரை சுத்தப்படுத்தியதாக தெரிகிறது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கிரைண்டரை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த ராமலட்சுமி உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி முடிந்து வந்த மகன் விஷ்ணு சங்கர், தன்னுடைய தாய் மின்சாரம் பாய்ந்து பலியானது தெரிந்து தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். கணவர் பாஸ்கர பாண்டியன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு ராமலட்சுமி சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com