காதலனை பழிவாங்க நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் ஐடி ஊழியர்; சிக்கியது எப்படி?
கடந்த சில தினங்களுக்கு முன் அகமதாபாத் ஷிலாஜில் உள்ள திவ்யஜோத் பள்ளிக்கு வார இறுதியில் பல வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. இது சர்கேஜ்-சாந்திபுரா வட்டத்திற்கு அருகிலுள்ள ஜெனீவா லிபரல் பள்ளிக்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போல் இருந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வளாகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
பள்ளி அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்கும், கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைவாகச் செயல்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினரும் வளாகத்தில் பல மணி நேரம் முழுமையான சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த மின்னஞ்சல்களில், ஹைதராபாத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை மற்றும் வரதட்சணை வழக்கைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக ஜெனீவா லிபரல் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் மின்னஞ்சலுக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என தெரியவந்துள்ளது. இருப்பினும் நிர்வாகம் தரப்பில் பள்ளி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கும் என்று பெற்றோருக்குத் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநிலத்தில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ரீதியான விசாரணையில் சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள ரினே ஜோஸ்லிடா( René joshlida) என்ற பெண்ணின் ஈமெயில் முகவரியில் இருந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து குஜராத்தில் இருந்து பெண் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னையில் உள்ள கே.கே நகர் போலீசார் உதவியுடன் அந்தப் பெண்ணின் வீடு மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தை வீடு ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு ரினே ஜோஸ்லிடா மற்றும் அவரது தந்தை ஆல்ட்வின் ஜோசப் ஆகிய இருவரையும் விசாரணைக்காக சென்னை விமான நிலையம் மூலம் குஜராத்திற்கு தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
திடுக்கிடும் தகவல் என்ன?
விசாரணைக்கு பின் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண் ஐ.டி ஊழியரான ரீனே ஜோசிடா பெங்களூரில் திவிச் பிரபாகர் என்ற சக ஊழியருடன் ஒரு தலைப்பட்சமாக காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், திவிஜ் பிரபாகர் ரீனே ஜோசில்டாவின் காதலை ஏற்காமல் வேறு ஒரு பெண்ணை திருமணத்தை செய்து கொண்டுள்ளார்.
இதற்கு பழி வாங்கும் விதமாக தனது ஒருதலை காதலன் பிரபாகரை பெரிய சிக்கலில் சிக்க வைப்பதற்காக, தான் படித்த ரோபாட்டிக் பொறியியல் படிப்பு மூலம் கிடைத்த தொழில் நுட்ப அறிவினை பயன்படுத்தி போலியாக இமெயில் ஒன்றை உருவாக்கி இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ளது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து ஜூன் மாதம் 20ஆம் தேதி வரையில், முக்கியமான நிகழ்வுகள் நடைபெறுவதை ஒட்டி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், 12 மாநிலங்களிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக மத நிகழ்வுகள் தொடர்பாகவும் முக்கிய தலைவர்கள் வருகை அடிப்படையில் வெடிகுண்டு மிரட்டல்கள் இமெயிலாக அனுப்பப்பட்டுள்ளன அது மட்டும் அல்லாது, நரேந்திர மோடி மைதானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும், ஏர் இந்தியா விமான விபத்தில் 270 பேர் உயிரிழப்பதற்கு தான் காரணம் என பொறுப்பேற்கும் வகையிலும் வெடிகுண்டு இமெயில் மிரட்டல்களை ரீனே ஜோஷில்டா அனுப்பியது தெரியவந்துள்ளது.
இதில் அவரது காதலன் திவிச் பிரபாகரை சிக்க வைக்கும் வகையில், பிரபாகர் பெயரில் இமெயில் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
முக்கியமாக வி.பி.என் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டார்க் வெப் மூலமாக தன்னை கண்டுபிடிக்க முடியாத வகையில் வெடிகுண்டு ஈமெயில் மிரட்டலை 12 மாநிலங்களில் அனுப்பியது தெரியவந்துள்ளது. இருப்பினும், அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்ட போது போலி இமெயில் வந்த கணினியில், உண்மையான ஈமெயில் முகவரியை பயன்படுத்தியதன் காரணமாக ரீனே ஜோஷில்டா சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கியுள்ளார் என அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு தலை காதலில், காதலனை பழிவாங்குவதற்காக 12 மாநிலங்களில் 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நாட்டையே மிரள வைத்த விவகாரத்தில் அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் , சென்னையைச் சேர்ந்த ரொபாட்டிக் பொறியியல் பட்டதாரியான பெண்ணை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.