மந்தைவெளி| அடிப்படை வசதிகள் இல்லாத கருத்தரிப்பு மருத்துவமனை..? அறுவை சிகிச்சையில் பெண் மரணம்!
மந்தைவெளி பாரதி கருத்தரிப்பு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால், லேப்ராஸ்கோபி சிகிச்சை பெற்ற அமலசோபியா என்ற பெண் மரணமடைந்தார். குடும்பத்தினர் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். அமலசோபியாவின் உடல் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ஆதனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆனந்த பிரகாஷ் (33) - அமலசோபியா(31). ஆனந்த பிரகாஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், திருமணம் ஆகி இத்தம்பதியினருக்கு கடந்த சில ஆண்டுகள் குழந்தை இல்லாததால் ஊரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பாரதி கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில், அமலசோபியாவின் கருப்பையில் சிறிய அளவில் சிஸ்ட் உருவாகியுள்ளதாகவும், அதனை லேப்ராஸ்கோபி என்ற சிகிச்சை மூலம் அகற்றி விட்டால் கரு உருவாகும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், மந்தைவெளியில் உள்ள தங்களது தலைமை அலுவலகமான பாரதி கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தம்பதியினரிடம் கூறியுள்ளனர். இதன் பேரில் நேற்று காலை சோதனைக்காக தம்பதியினர் மந்தைவெளியில் உள்ள பாரதி கருத்தரிப்பு மருத்துவமனைக்கு வந்தபோது, ஏற்கனவே ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள மருத்துவ அறிக்கைகளை பார்த்து சிகிச்சை மேற்கொள்ளலாம் என கூறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லேப்ராஸ்கோபி சிகிச்சை நேற்று காலை 9 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்தில் கண்விழிப்பார் எனக் கூறப்பட்ட அமலசோபியா மதியம் இரண்டு மணி வரை கண்விழிக்காததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாரதி மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அங்கு கொண்டு சென்ற போது அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், அமலசோபியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்ணீர் விட்ட குடும்பத்தினர்..
இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதி மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், அமலசோபியாவின் உடல் ராயப்பேட்டை பிணவறையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு வந்த குடும்பத்தினர் அமலசோபியாவின் மரணத்திற்கு பாரதி கருத்தரிப்பு மருத்துவமனை அஜாக்கிரதையாக செயல்பட்டது மட்டுமே காரணம் எனக் கூறியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்களது பிள்ளையை போல் அங்கு வரக்கூடிய நூற்றுக்கணக்கான நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது எனக்கூறி நேற்று காலை ராயப்பேட்டை பிணவறை எதிரே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் இருந்து வந்த ராயப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அடிப்படை வசதிகள் கூட இல்லை..
அமலசோபியாவின் கணவர் ஆனந்த பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது ஒரு சாதாரண சிகிச்சை தான் எனவும் 1 மணி நேரத்தில் அமலசோபியா கண்விழித்து விடுவார் என கூறியதாகவும், பின்னர் சிறிது நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை முடிந்து விட்டது. ஆனால் அமலசோபியா கண் விழிக்க வில்லை அதனால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்ததாகவும் கூறினார். மதியம் 2 மணி வரை அமலசோபியா கண் விழிக்காததால் மருத்துவமனை நிர்வாகம் தனது மனைவியை மயக்க நிலையிலேயே வைத்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததாகவும், அங்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாகவும் அமலசோபியாவின் கணவர் ஆனந்த கிருஷ்ணன் கண்ணீர் மல்க கதறியழுதார்.
மேலும், அமலசோபியாவின் சகோதரர் ஆண்டனி பேசுகையில், முழுக்க முழுக்க பாரதி மருத்துவமனையின் அஜாக்கிரதை காரணமாக மட்டுமே தனது அக்கா உயிரிழந்ததாகவும் மருத்துவமனையில் எவ்வித கட்டமைப்பும் இல்லை எனவும் தெரிவித்தார். குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யப்படும் போது கருவிகள் இல்லை எனக் கூறி அடுத்த மருத்துவமனைக்கு எவ்வாறு மாற்ற முடியும்? அப்படி கருவிகள் இல்லை என்றால் எதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்? இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத மருத்துவமனைக்கு யார் அப்ரூவல் கொடுத்தார்கள்? எனவும் தனது சகோதரியின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமும், சிகிச்சை செய்த மருத்துவர்கள் மட்டுமே காரணம் எனக்கூறி அவர்களை கைது செய்து அந்த மருத்துவமனைக்கு வரும் மற்ற பயனாளிகளின் உயிரை காக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கதறியழுதார்.
இச்சம்பவம் குறித்து மந்தைவெளியில் அமைந்துள்ள பாரதி கருத்தரிப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று விளக்கம் கேட்டபோது, "எவ்வித விளக்கமும் உங்களிடம் தர இயலாது வெளியே செல்லுங்கள்" எனக்கூறி செய்தியாளர்களை வெளியே அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் மருத்துவ கவுன்சிலிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு தரும் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் மீதும், சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

