“நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை” – ரூ.20 லட்சத்தை விஜய்க்கே திருப்பி அனுப்பிய பெண்
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி, விஜய் நேரில் ஆறுதல் கூறாததால், அவரால் வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பினார். சங்கவியின் உறவினர்கள் விஜயின் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதையும் அவர் கண்டித்திருக்கிறார்.
கரூர் அருகே கோடங்கிபட்டியை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி சங்கவி. கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பரப்பரை மேற்கொண்டபோது அந்த கூட்டத்திற்கு ரமேஷ் சென்றார். அப்பொழுது அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரமேஷ் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மனைவியான சங்கவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 20 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைத்தனர். இதற்கிடையே, நேற்று கரூரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை மாமல்லபுரம் அருகேயுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்காகவும், கரூரில் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்க முடியாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரியுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு ரமேஷின் மனைவி சங்கவி மற்றும் அவரது வீட்டில் இருந்து யாரும் செல்லவில்லை.
இந்நிலையில், ரமேஷின் அக்கா, அக்கா கணவர் மற்றும் சங்கவியின் சித்தப்பா ஆகிய 3 பேரையும் தவெகவினர் தங்களுக்கு தெரியாமலேயே சென்னைக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டிய சங்கவி, தனது கணவர் இறப்பிற்கு வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாயை விஜய்க்கு ஆர்டிஜிஎஸ் முறையில் திருப்பி அனுப்பி விட்டார்.
அவர் கூறுகையில், “விஜய் நேரில் வந்து ஆறுதல் கூறுவதாக கூறியிருந்தார். அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். பணத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை. இன்று சென்னைக்கு எனது உறவினர்களை எனக்கு தெரியாமலேயே தமிழக வெற்றிக் கழகத்தினர் அழைத்துச் சென்று இருக்கின்றனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. விஜய் எனக்கு வழங்கிய ரூ.20 லட்சத்தை அவரது அக்கவுண்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டேன்” என செய்தியாளர்களிடம் சங்கவி தெரிவித்தார்.
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒருவரின் மனைவி தனக்கு வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் பணத்தை தமிழக வெற்றிக் கழகத்திற்கு திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

