''மாப்பிள்ளை எண்ணுக்கு புகைப்படத்தை அனுப்பு'': மணமகளின் திட்டத்தால் நின்றுபோன திருமணம்!
காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை பெண் ஒருவர் நிறுத்தியுள்ளார்
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அப்போது அவரை திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளைக்கு புது எண்ணில் இருந்து நிறைய புகைப்படங்கள் வந்தன. புகைப்படங்களை பார்த்த மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். தனக்கு பார்க்கப்பட்ட பெண் மற்றொரு ஆணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவை. உடனடியாக தகவலை தன் பெற்றோரிடம் தெரிவித்த மணமகன், திருமணத்தை உடனடியாக நிறுத்தினார். செல்போனுக்கு வந்த சில புகைப்படங்களால் திருமணமே நின்றது. அடுத்த நாளே உறவுக்கார பெண் ஒருவருடன் அவருக்கு திருமணமும் நடைபெற்றது.
மாப்பிள்ளை வீட்டுக்கு யார் புகைப்படத்தை அனுப்பி இருப்பார்கள் என யோசித்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்டு எம்ஜிஆர் நகர் போலீசார் எந்த எண்ணில் இருந்து புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என ஆய்வு செய்தனர். அந்த எண்ணின் உரிமையாளரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த இளைஞரும், திருமணம் நடக்கவிருந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் காதலை ஏற்காத பெற்றோர், அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து திருமணத்தை நிறுத்த திட்டமிட்ட பெண், தனக்கு பார்த்த மாப்பிள்ளையின் எண்ணை தன் காதலனுக்கு அனுப்பி, இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனுப்பச் சொல்லியுள்ளார்.
அதன்படியே காதலித்த இளைஞரும் புகைப்படங்களை அனுப்பி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து காதலனையும் அந்த பெண்ணையும் அழைத்து காவலர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.