’காதல் கணவனுடன் சேர்த்து வையுங்கள்’ - விஷம் அருந்தி காவல்நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்
விருதுநகரில் காதல் திருமணம் செய்து பின்னர் வீட்டாரின் வற்புறுத்தலால் பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், விஷம் அருந்தி இருந்ததால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் மகேஷ் ராணி (28). இவர் தனது உறவினரான காரியாபட்டி கரிசல் குளத்தைச் சேர்ந்த வீரசீமான்(32) என்பவரை காதலித்துள்ளார். இருவருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. இவர்கள் திருமணத்திற்கு வீரசீமானின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் முடிந்த மறுநாளே மகேஷ் ராணியை அவரது பெற்றோரின் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வந்து அழைத்து செல்வதாக சொல்லி கணவர் சென்றுவிட்டார். ஆனால் அவர் வந்து அழைத்துச் செல்லவில்லை.
இதுகுறித்து மகேஷ் ராணி அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் வீரசீமானின் பெற்றோர் மட்டுமே காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளனர். வீரசீமான் ஆஜராகவில்லை. அவர்மீது போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஷ் ராணி விஷம் அருந்திவிட்டு நேற்று இரவு விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்தார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
காதல் கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் தடுக்கும் கணவரின் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஷம் அருந்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.