“எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள்” - மீண்டும் தலைத்தூக்கிய கந்துவட்டி கொடுமை

“எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள்” - மீண்டும் தலைத்தூக்கிய கந்துவட்டி கொடுமை
“எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள்” - மீண்டும் தலைத்தூக்கிய கந்துவட்டி கொடுமை

வாங்கிய கடனுக்கு பதிலாக வீட்டை கந்துவட்டி கும்பல் ஆக்கிரமித்துவிட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியை சேர்ந்த டிலேட்டா என்பவர் வாங்கிய கடனுக்காக தன்னுடைய வீட்டை கந்துவட்டி கும்பல் ஆக்கிரமித்துவிட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிலேட்டா, “திருச்செந்தூர் வட்டம் அமலிநகர் வடக்கு தெருவில் நான் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். என்னுடைய வீடு மணப்பாட்டில் உள்ளது. தினமும் மீன் வியாபாரம் செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறேன். 

வள்ளம் வாங்கி தொழில் செய்வதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு மணப்பாடு கடற்கரை தெருவை சேர்ந்த மலர்விழி என்பவரிடம் 2 லட்சத்து 90 ஆயிரம் கடனாக வாங்கி இருந்தேன். இதற்கு 5 சதவீத வட்டியும் மாதந்தோறும் கட்டிவந்தேன். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வட்டி பணத்தை என்னால் கொடுக்க முடியவில்லை. இதனால், மலர்விழி, என்னையும் எனது குழந்தைகளையும் வீட்டிலிருந்து வெளியே துரத்தி எனது வீட்டுக்கு பூட்டுப் போட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டார். இதுகுறித்து பலமுறை அவரிடம் முறையிட்டும் அவர் எனது வீட்டின் சாவியை கொடுக்க மறுத்துவிட்டார். மேலும் அடியாட்களை வைத்து என்னையும், எனது குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார்.

கந்து வட்டி கொடுமை குறித்து குலசேகரப்பட்டினம் போலீசில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். வாழ வழியின்றி தற்போது குழந்தைகளுடன் திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரை பகுதியில் ஓலைக் குடிசை ஒன்றில் வசித்து வருகிறேன். கந்து வட்டி கொடுமை காரணமாக எனது மூன்று குழந்தைகளும் தற்பொழுது பள்ளிக்கு செல்லவில்லை. எனவே, கந்து வட்டி கொடுமையினால் பறிக்கப்பட்ட எனது வீட்டை மீட்டு குழந்தைகளின் கல்விக்கு வழிவகுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com