திருவாரூரில் அதிமுக சார்பில் பெண் வேட்பாளர்..?

திருவாரூரில் அதிமுக சார்பில் பெண் வேட்பாளர்..?
திருவாரூரில் அதிமுக சார்பில் பெண் வேட்பாளர்..?
Published on

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மலர்விழி கலியபெருமாள் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31-ல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது. சாகுல் அமீது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அமமுக சார்பில் அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதேபோல திமுக சார்பில் பூண்டி கலைவாணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அதேசமயம் ஆளும் அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. ஆனால் தற்போது இந்த இடைத்தேர்தலை அதிமுக சவாலாக எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேட்பாளர் தேர்வு முதல் பரப்புரை வரை அனைத்திலும் கவனம் செலுத்த அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி வேட்பாளர் தேர்வில் தாமதம் இருந்தாலும் கூட மக்களிடம் செல்வாக்கு உள்ள வேட்பாளரை நிறுத்த அதிமுக கவனம் செலுத்தி வருகிறது.

அதிமுகவின் வேட்பாளர் ரேஸில் தற்போது ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம், மணிகண்டன், கலியபெருமாள், மலர்விழி கலியபெருமாள்
 ஆகியோர் உள்ளனர். அதிலும் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் மற்றும் மலர்விழி கலியபெருமாள் ஆகியோர் இடையே கடும்போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இருந்தவரை பெண்களின் வாக்குகள் எப்போதுமே அதிமுகவிற்கு சற்று பலமானதாக இருக்கும். அதைப்போல தற்போதும் பெண் வேட்பாளரை நிறுத்தினால், அதன்மூலம் வெற்றியை ஈட்டிவிடலாம் என அதிமுக கருதுவதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் மலர்விழி கலியபெருமாளே வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனையின் போது அனைத்துக் கட்சியினரும் திருவாரூர் மாவட்டத்தில் நிவாணரப்பணிகள் முழுமையான நடைபெறாததால், இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், தற்போதைய சூழலில் திருவாரூர் இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்திக்கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனால் திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது போல நடைபெறுமா..? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com