புயல் உருவாவதில் தாமதம்.. 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அதிதீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தமிழக கடலோரப் பகுதிகளை மிரட்டிவரும் நிலையில், அது நாளை புயலாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இன்று மாலையே புயல் உருவாகும் என கூறப்பட்ட நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்துவந்த நிலையில், தற்போது 3 கி.மீ. ஆக குறைந்துள்ளது. இதனால், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் புயல் சின்னம் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உருவாகப்போகும் இந்தப் புயலுக்கு ‘ஃபெங்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும், இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காற்றழுத்தத் தாழ்வுநிலைக் காரணமாக கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது. ஆனாலும் இப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.