அதிமுக உட்கட்சித் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

அதிமுக உட்கட்சித் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது
அதிமுக உட்கட்சித் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், காலை 10 மணியளவில் தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் நாளை மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் 5-ம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6ம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து டிசம்பர் 7ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக் குழுவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என்ற சட்ட விதி 20 (அ) திருத்தியமைக்கப்பட்டு, அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் இனி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இருவருக்கும் பொதுச்செயலாளருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரும் காலையிலேயே அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு வந்த தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். மேலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com