ஒரே நாளில் அனைத்தும் காலி... சரிந்த பரந்தூர் நில மதிப்பு.. வீணான மாதிரி வீடுகள்!
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதால், அங்கு நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு 6–10 லட்சத்தில் இருந்து 25–35 லட்சம் வரை பல மடங்கு உயர்ந்தது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பொதுமக்கள் பெருமளவில் முதலீடு செய்த நிலையில், ஆட்சி மாற்றத்துடன் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஒரே நாளில் 5 சதவீதம் வரை நில மதிப்பு சரிந்து, முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் இடப்பற்றாக்குறை காரணமாக சில ஆண்டுகளில் அதிக நெருக்கடியை சந்திக்கும் என்பதால் 2 ஆவது விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. நீண்ட கால படிநிலைகளுக்குப்பிறகு பரனுர், பரந்துர் உள்ளிட்ட இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவற்றில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் அந்த விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னர் ஏக்கருக்கு 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை சென்ற நிலத்தின் மதிப்பு, அறிவிப்பு வெளியானதும் 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை உயர்ந்தது. அதோடு அந்த சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் முதலீடு செய்த நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தின் மதிப்பும் அதிகரித்தது.
இந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக பல மடங்கு விலை ஏறிய பரந்தூர் பகுதி நிலத்தின் மதிப்பு ஒரே நாளில் 5- சதவீதம் வரை கீழே சரிந்துள்ளது. இதனால் அங்கு முதலீடு செய்திருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் அதில் நிலத்தை வாங்கியிருந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக கடந்த திமுக ஆட்சியில் இடம்பெயர வேண்டிய மக்களுக்காக சுமார் 1,500 புதிய வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டது. இதற்காக இரண்டு வகையான மாதிரி வீடுகள் கட்டப்பட்டு, சென்னை–வேலூர் ஸ்ரீபெரும்புதூர் பைபாஸ் சாலையோரம் அமைந்துள்ள காரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்தன.
அந்த மாதிரி வீடுகளை பரந்தூர் விமான நிலையத்துக்காக இடம் கொடுத்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு, தங்களுக்கு விருப்பமான வீட்டின் வடிவமைப்பைத் தேர்வு செய்திருந்தனர். தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால், அந்த மாதிரி வீடுகள் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளன. இதனால், இடம்பெயர வேண்டியிருந்த கிராம மக்கள் மீண்டும் தங்களது பழைய வீடுகளிலேயே வசிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

