'இதை 1987-ல் பார்த்து விட்டோம்; இருவரின் சுயநலத்திற்காக தொண்டர்களை நீக்குவதா?' - சசிகலா

'இதை 1987-ல் பார்த்து விட்டோம்; இருவரின் சுயநலத்திற்காக தொண்டர்களை நீக்குவதா?' - சசிகலா
'இதை 1987-ல் பார்த்து விட்டோம்; இருவரின் சுயநலத்திற்காக தொண்டர்களை நீக்குவதா?' - சசிகலா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வீடியோ விநியோகித்ததன் மூலம் அதிமுகவினருக்கு அறிமுகமான சசிகலா, மீண்டும் அக்கட்சியில் ஐக்கியமாக ஆடியோக்களை கையில் எடுத்துள்ளார். ஆடியோ விவகாரத்தில் அதிமுக அதிரடி தீர்மானம் எடுத்துள்ள நிலையில், தொடர்ந்து வெளியாகும் ஆடியோக்கள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை காண்போம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் வீசத் தொடங்கிய புயல், இன்னும் ஓயவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளராக சிறைக்கு சென்ற சசிகலா, 4 ஆண்டுகள் தண்டனை முடித்து திரும்பியபோது அவரிடம் கட்சியும் இல்லை, அவர் அதிமுகவில் உறுப்பினராகவும் இல்லை. கட்சி கைவிட்டு போன நிலையில், தமது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் உரையாடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் சசிகலா. தற்போது வரை 49 ஆடியோக்கள் வெளியாகி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலா அதிமுகவை அபகரிக்க நினைப்பதாகவும், அவருடன் தொலைபேசியில் பேசக்கூடிய அதிமுகவினரை கட்சியில் இருந்து நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சசிகலாவுடன் பேசிய 15 பேர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் சசிகலாவின் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், " 1987ஆம் ஆண்டு தலைவர் இறந்தபிறகு தொண்டர்கள் அம்மா பக்கம் நின்றனர். இவர்களது நடவடிக்கையெல்லாம் 1987-லியே பார்த்து விட்டோம். 2 பேரின் சுயநலத்திற்காக தொண்டர்களை நீக்குவது சரியா?. குத்தி குத்தி என் முதுகில் இடமே இல்லை " என்கிறார்.

இதனிடையே சசிகலா ஆடியோ விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு அதிமுகவில் குழப்பதை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அக்கட்சியினர் சிலர் கூறுகிறார்கள். கொரோனா பரவல் முடிந்ததும் சசிகலா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.

வீடியோ அளவுக்கு ஆடியோ சசிகலாவுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com