திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகே செயல்படும் ஓட்டல்கள் பார்களாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருத்தணி, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்களில் காலை நேரங்களில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குடிமக்களுக்கு மது பாட்டில்கள், குடிநீர், டம்ளர், சைடீஸ் கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, முட்டை, சுண்டல் உட்பட அனைத்தும் விற்கப்படுவதோடு ஹோட்டல்களில் மது அருந்தவும் அனுமதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
குடிபோதையில் மிதக்கும் போதை ஆசாமிகள் சாலையில் சென்று வரும் பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்வது, தகாத வார்த்தைகளில் பேசுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.