2 தேர்தலில் அதிமுக ஆட்டத்தை குலைத்த தினகரன்.. பேச்சின் உள்ளர்த்தம் என்ன..? என்ன பிளான்?
2019, 2021 தேர்தல்களைப் போன்று 2026 தேர்தலிலும் தாக்கத்தை உண்டாக்குவோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுவதற்குப் பின்னணியில், அவர் வசம் உள்ள வாக்கு வங்கியே காரணமாக இருக்கிறது. சென்ற தேர்தல்களில் அதிமுகவின் ஆட்டத்தை கலைத்த தினகரன், இந்த முறையும் ஆட்ட குலைப்பாளராக உருவெடுக்கிறாரா? பெருஞ்செய்தியில் அலசலாம்!
அதிமுக ஓட்டு களைகளைத்த அமமுக..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களால், அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், 2018இல் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எனும் தனிக்கட்சியைதொடங்கினார். அதிமுகவைக் கையகப்படுத்துவது அல்லது தன் கட்சிநோக்கி அதிமுகவினரை இழுப்பதே அந்தக் கட்சியின் மைய நோக்கமாக இருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலில் 5.25% ஓட்டுகளைப் பெற்று, சுமார் 20 தொகுதிகளில் மூன்றாமிடத்துக்கு வந்தது அமமுக. அடுத்து வந்த 2021சட்டமன்றத் தேர்தலில் அதன் வாக்குவங்கி 2.35% ஆகக் குறைந்தது. ஆனாலும், 24 தொகுதிகளில் 3ஆம் இடத்தைபிடித்தது அமமுக. இதையே அரசியல்கணக்கு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இரண்டுதேர்தல்களிலுமே குறைந்தது 20 தொகுதிகளில் ஓட்டுகளைப்பிரித்து, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை நாசமாக்கியது. குறிப்பாக தென்தமிழ்நாட்டில் அதிமுகவின் வாக்குகள் பெருமளவில் குறைய வழிவகுத்தது அமமுக.
2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். பன்னீர்செல்வம் –தினகரன் இருவரும் சேர்ந்தால், இருவரின் ஓட்டு பலமும் மேலும் அதிகரிக்கும். இத்தகு பின்னணியில்தான் இருவரையும் 2024 தேர்தல் சமயத்தில் தன் பக்கம் பாஜக கொண்டுவந்தது. பாஜகவின் ஓட்டு வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு 2024 தேர்தலில் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆனதற்கு, அப்போது அமைத்த கூட்டணியும் காரணம்.
தினகரன் பேச்சின் உள்ளர்த்தம் என்ன?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில்வெல்ல வேண்டும் என்றால், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுககூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக்கட்சிகள், பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகள் இவற்றோடு மேலும் பல புதியகட்சிகளைச் சேர்க்க வேண்டும். ஏனென்றால், அதிமுக, பாஜககூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளும் வாங்கியஓட்டுகளையும் சேர்த்தாலும், திமுககூட்டணி வாங்கிய ஓட்டுகளைவிட 5.6%வாக்குகள் குறைவாகவே இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஓ.பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டோரையும் இழக்க நேர்ந்தால் என்னவாகும்? தவிர, தேர்தலில் தனித்துநிற்காமல், விஜயின் தவெக போன்ற ஒருகட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் எவ்வளவு சேதாரம் விளையும்? இதுதான் தினகரன் பேச்சின் உள்ளர்த்தம்!
தினகரனின் அமமுக போன்று குறைந்தது 10 மடங்கு வலியது தன்தலைமையிலான அதிமுக என்பதை முந்தைய தேர்தல் மூலம் வலுவாக நிரூபித்துவிட்டார் பழனிசாமி. இன்றையசூழலில், பன்னீர்செல்வமோ, தினகரனோகூட தங்களுடையதொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறுவார்கள் என்று சொல்வதற்குஇல்லை. ஆனால், பழனிசாமியின் ஆட்சிகனவை அவர்களால் குலைக்க முடியும். இதைத்தான் தினகரனின் பேட்டிசொல்கிறது!