தங்கத்தை விட சிறந்த முதலீடாக மாறுகிறதா வெள்ளி?
சர்வதேச சூழல்கள் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வருகிறது. ஒரு சவரன் 65 ஆயிரம் ரூபாயை தாண்டி உயர்ந்து வருவது வருங்காலங்களில் அது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகி விடுமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தங்கத்தை விட வெள்ளி வேகமாக விலையேறி வருவது அதிகம் அறியப்படாத ஒன்றாக உள்ளது. கடந்த ஓராண்டில் சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு மார்ச்சில் ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 113 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரம் கடந்தாண்டு மார்ச் 17ஆம் தேதி கிராமுக்கு 6 ஆயிரத்து 90 ரூபாயாக இருந்த தங்கம் விலை தற்போது 8 ஆயிரத்து 210 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது தங்கத்தின் விலையேற்ற விகிதம் 35% ஆக உள்ள நிலையில் வெள்ளியின் விலையேற்ற விகிதம் 41% ஆக உள்ளது.
தங்கத்தை விட வெள்ளி விலை உயர்வு அதிகமாக இருக்கும் போக்கு இந்தாண்டு இறுதி வரை தொடரும் என விஸ்டம் ட்ரூ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5ஆவது ஆண்டாக வெள்ளி உற்பத்தி குறைந்துள்ளதால் அதன் விலை வேகமாக அதிகரிப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தாண்டு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வெள்ளி விலை உயர வாய்ப்புள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னுற்பத்திக்கான சோலார் பேனல்கள் தேவை உலளகவில் பெருகி வரும் நிலையில் அதன் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் வெள்ளிக்கு தேவை அதிகரித்து வருவதாக சந்தை நிபுணர்கள் விளக்குகின்றனர். மேலும் ஏஐ தொழில்நுட்பத்தின் எழுச்சியால் தகவல் சேமிப்புக்கான டேட்டா சென்டர்களும் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன. அதில் பன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களிலும் வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் சேர்ந்து வெள்ளிக்கு வரலாறு காணாத தேவையை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக வெள்ளியின் விலை வெகுவாக அதிகரித்து தங்கத்தை விட லாபகரமான முதலீட்டுப்பொருளாகவும் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.