தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகிறாரா முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்?

சுதர்சன நாச்சியப்பன் மூத்த தலைவர், மத்திய அமைச்சராக இருந்தவர். கட்சி நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தும் ஆளுமை அவருக்கு இருக்கிறது.
Sasikanth Senthil
Sasikanth SenthilIndian national Congress

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார் என்கிற விவாதம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சிக்குள் நிகழ்ந்துவருகிறது. தற்போது தலைவராக இருக்கும் அழகிரி இப்போது மாற்றப்படுவார், அப்போது மாற்றப்படுவார் என ஆருடங்கள் சொல்லப்பட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும், அடுத்த தலைவர் இவர்தான் என சிலரின் பெயர்கள் வெளியே வரும். அப்படி இதுவரை, எம்.பிக்கள் செல்லக்குமார், ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ என பலரின் பெயர்கள் தலைமைப் பதவிக்கான ரேஸில் அடிபட்டன. இடையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, சசிகாந்த் செந்திலின் பெயரும் அடிபட்டது. தற்போது, புதிதாக அந்தப் பட்டியலில் முன்னாள் எம்.பி.சுதர்சன நாச்சியப்பனும், தற்போதைய திருவள்ளூர் தொகுதி எம்.பியும் செயல் தலைவருமான ஜெயக்குமாரின் பெயரும் அடிபட ஆரம்பித்திருக்கிறது. உண்மையில், தற்போது தலைவர் பதவி மாற்றம் இருக்கிறதா, அடுத்த தலைவர் யார்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை பதவி வகித்து வருகிறார் கே.எஸ்.அழகிரி. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தலைவராக வருபவர்கள் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை அந்தப் பதவியில் இருப்பர். அந்த வகையில், கடந்த 2022 பிப்ரவரி மாதத்தோடு கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால், தற்போதுவரை, கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக அவரே தலைவராக நீடித்துவருகிறார். இந்தக் காலகட்டத்தில் இவர்தான் அடுத்த தலைவர் என பல்வேறு பெயர்கள் அடிபட்டன. அந்தப் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறதே தவிர, தலைவர் யார் என்று இன்னும் அகில இந்தியத் தலைமை முடிவு செய்யவில்லை. ஏன் இந்தத் தாமதம் கட்சி வட்டாரத்தில் பேசினோம்..,

``தற்போது தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் இதுவரை சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து வகையான தேர்தலையும் எதிர்கொண்டிருக்கிறோம். மூன்றிலுமே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வெற்றிவிகிதம் கிடைத்திருக்கிறது. அவரைப் போன்று கட்சியையும் கூட்டணித் தலைமையும் சமாளிக்கிற ஒருநபரைத் தேர்தெடுக்க வேண்டும் என்பதால்தான் தாமதமாகிறது. உதாரணமாக, செல்லக்குமார், ஜோதிமணி போன்றவர்கள் கட்சிக்காக நன்றாக உழைக்ககூடியவர்கள்தான். ஆனால், இருவருக்கும் கொஞ்சம் திமுக எதிர்ப்பு மனநிலை இருக்கிறது.அது தேர்தல் காலத்தில் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அகில இந்தியத் தலைமை கவனமாக இருக்கிறது.

அதேபோல், கார்த்திக் சிதம்பரத்தின் பெயர் அடிபட்டது. 'தமிழக காங்., தலைவர் பதவி கொடுத்தால், ஏற்றுக்கொள்ள நான் தயார்’ என அவரே வெளிப்படையாகவே பேசினார். ஆனால், கட்சிக்குக் கட்டுப்பட்டு அவர் இருக்கமாட்டார் என்று டெல்லி தலைமை நினைக்கிறது. 2019 தேர்தலில் அவருக்கு எம்.பி சீட் கொடுப்பதிலேயே இழுபறி நீடித்தது. சமீபமாக, சுதர்சன நாச்சியப்பன் பெயரும் ஜெயக்குமார் பெயரும் அடிபடுகிறது. சுதர்சன நாச்சியப்பன் மூத்த தலைவர், மத்திய அமைச்சராக இருந்தவர். கட்சி நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தும் ஆளுமை அவருக்கு இருக்கிறது. அதேபோல, ஜெயக்குமாரும் மூத்த தலைவர்தான். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் அவருடைய சிபாரிஸில் சில மாவட்டத் தலைவர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பட்டியல் பிரிவைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை இருப்பதால் அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது சந்தேகம்தான். தவிர, இருவருமே, 70 வயதைத் தாண்டியவர்கள்.

கர்நாடகா தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தமிழக காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான சசிகாந்த் செந்திலின் பெயர் ரேஸில் பிரதானமாக இருந்தது. ஆனால், அவர் அகில இந்திய அளவில் தேர்தல் உள்ளிட்ட பல வேலைகளைச் செய்ய வேண்டியிருப்பதால் தலைமை யோசிக்கிறது. இந்தமுறை இல்லாவிட்டாலும், அடுத்த முறையாவது சசிகாந்த் செந்தில் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் அழகிரியே தலைவர் பதவியில் நீடித்தால், அடுத்த தலைவராகவே சசிகாந்த் செந்தில் வர வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.

இந்தநிலையில், தலைவர் மாற்றம் குறித்து, காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம்..,

``இப்போது தலைவர் மாற்றம் குறித்து வரும் செய்திகளில் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை. அதற்கான அறிகுறிகள் தற்போது எதுவும் தென்படவில்லை. தலைவரை மாற்றும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு உண்டு. அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com