“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
நடிகை சமந்தா தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து தனது மெளனத்தை உடைத்து பதில் அளித்திருக்கிறார்.
தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்தும் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்தும் நடிகை சமந்தா வெளிப்படையாக பேசவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் ஆதரிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வந்தனர். இதனால், அவர் வருத்தத்தில் இருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை சமந்தா பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் “இந்தச் சம்பவம் நடந்த போது அது குறித்து நான் எதையுமே கூறவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டப்பட்ட ஒவ்வொரு செய்தியும் எனக்கு வந்தது. ஒரு ட்வீட் செய்துவிட்டால் என்னை அந்தக் குற்ற உணர்விலிருந்து அது விடுவித்துவிடாது” எனக் குறிப்பிட்டுள்ளார். சமந்தா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் அதன் ஒரு பகுதியாக இருந்து ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார். ஆனாலும் இந்தச் சம்பவத்தில் அவர் எதையும் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது விழுந்துள்ளது.
இந்தச் சர்ச்சைக்குப் பின்னர் ஊடகங்களுடன் பேசிய அவர், “இந்த என்கவுன்ட்டரில் எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று சொல்வது தவறு. ஆனால், பயம்தான் இந்த நேரத்திற்கு ஒரே தீர்வு என்று நான் நம்புகிறேன். தீர்ப்பு வழங்கப்படாமல் நீதிமன்றங்களில் சுமார் மூன்று கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்றன.
இந்தச் சம்பவம் நமது நீதித்துறை அமைப்பையும் நமது சட்டங்களையும் சரி செய்யும் ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பு என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இவ்வளவு காலம் காத்திருக்கக் கூடாது. ஆனால் இந்த நேரத்தில், நான் இங்கு நின்று கொண்டு என்கவுன்ட்டர்களை கொண்டாட மாட்டேன். என்கவுன்ட்டர் மகிழ்ச்சிக்கான விஷயம் அல்ல” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.